×

சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து கோவையில் கிராம மக்கள் 2வது நாளாக சாலை மறியல்..!!

கோவை: குடிநீர் வழங்காததை கண்டித்து கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட கிராம மக்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜடையம்பாளையம் ஊராட்சிமன்றம் உள்ளது. ஜடையம்பாளையம் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 1,2,3,4,5 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட ஆலாங்கொம்பு, பறையூர், தண்ணீர்தடம், காந்திபுரம், சவுடீஸ்வரி நகர், வீராசாமி காலனி ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், ஜடையம்பாளையம் ஊராட்சி சார்பில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வறட்சி காரணமாக, கடந்த சில தினங்களாக 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், நேற்று மாலை 6 மணிக்கு ஆலாங்கொம்பு சந்திப்பு மற்றும் காந்திபுரம் எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் சாலை மறியல் போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் சமாதானமடையாத பொதுமக்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் தான் சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என கூறி நள்ளிரவு 1 மணி வரை போராட்டம் நடத்தினர். இதனிடையே பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் முன்வராததால் அமைதியாக களைந்து சென்றனர்.

நேற்று சுமார் 7 மணி நேரம் போராட்டம் நடத்திய நிலையில் சீரான முறையில் குடிநீர் வழங்காததை கண்டித்து இன்று 2வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம், சிறுமுகை சாலையில் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

The post சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து கோவையில் கிராம மக்கள் 2வது நாளாக சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Jadayampalayam ,Jadayampalayam panchayat ,Karamadai panchayat ,Mettupalayam Sirumugai road ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...